Skip to main content

நெல்லை மேயர் தேர்தல்; இருவர் வேட்பு மனுத் தாக்கல்!

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
Nellai mayor election; Two candidates filed
கிட்டு என்ற ராமகிருஷ்ணன்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 16வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர் நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும் இது குறித்து திமுக தலைமைக்கும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயருக்கு எதிராகப் புகார் மனு அளித்திருந்தனர்.

அதே சமயம் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியைக் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சரவணன் அளித்தார். இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

Nellai mayor election; Two candidates filed
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ்

இத்தகைய சூழலில் தான் நெல்லை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (05.08.2024) நடைபெற உள்ளது. இதனையொட்டி அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என் நேரு ஆகியோர் நேற்று (04.08.2024) நெல்லையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராகக் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் என்பவரை திமுக அறிவித்திருந்தது. நெல்லை மாநகராட்சியில் 3ஆவது முறையாக கவுன்சிலராக 25வது வார்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் கிட்டு ஆவார்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மற்றும் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜ் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் 44 திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் 7 பேர் என திமுகவிற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே நெல்லை மேயராக கிட்டு தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்