நிவர் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், நாகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் ஆகியோருடன் நாகை எம்எல்ஏவும் மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி ஆலோசனையில் ஈடுபட்டார்.
திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் அடைக்கலம் தேடும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், உணவு, மருத்துவ உதவி, குடிநீர் வினியோகம் ஆகியவை குறித்து அவர்களிடம் பேசியதுடன், மீனவர்களின் படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவது குறித்தும், குடிசைவாழ் மக்களின் பிரச்சனைகள் குறித்தும் அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் நாகூரில் தமிமுன் அன்சாரி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நகராட்சி ஊழியர்கள் பணிகளை முடுக்கி விட்டார். நாகூர் தர்ஹாவிற்கு சென்ற அவர் புயலால் பாதிக்கப்படும் மக்கள் அங்கு தங்கிடும் வகையில் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அவ்வூர் பொதுமக்களை சந்தித்த அவர் புயலின் தீவிரம் அறிந்து மிகவும் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முன்னதாக புயல் முன் எச்சரிக்கையாக நாகையில் மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன், நகர் முழுக்க இப்பணிகளை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.