அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தைக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருவதால், அ.தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தை அறிவித்து போலீசாரிடம் அனுமதி கேட்டது. அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயன்றனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மேலும், கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.