மக்களவையில் பாஜக மீதான எம்.பி கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் திமுக எம்.பி. கனிமொழி ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து சுமார் 20 நிமிடங்கள் பேசிய கனிமொழிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்பினை கொடுத்தனர்.
இந்நிலையில் எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “திமுகவினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிக்க நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றனர். புதுக்கோட்டையில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரத்தில் திமுக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
2023-2024 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு ரயில்வே பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கிய சராசரி நிதியை விட ஏழு மடங்கு அதிகம். தமிழகத்தில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பிலான ரயில்வே திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு மக்களவையில் பாஜக மீது கனிமொழி வேண்டுமென்றே குற்றம் சாட்டியுள்ளார்” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.