அதிமுக பாஜக கூட்டணியில் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக குறித்த பட்டியலை வெளியிட்ட நிலையில் இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் இது குறித்து கேட்கும் பொழுது அண்ணாமலைக்கு பதிலடி தந்த வண்ணம் இருந்தனர்.
நேற்று சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலையைப் பற்றி ஏன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படிப் பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நீங்கள் அவரைப் பற்றி பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது தெரியும். அவர் பேட்டி கொடுத்து பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து அவரது கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்.
கட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக்கேட்டால் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்கிறார். நீங்கள் 10 கேள்விகள் கேட்கிறீர்கள். இதற்கு எங்களைப் போல் உள்ள தலைவர்கள் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். தயவு செய்து இனிமேல் கேட்க வேண்டாம். முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், “ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்…” எனத் தெரிவித்துள்ளார்.