வரும் மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவை புறக்கணிக்கின்றன.
குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறி பிரதமர் திறந்து வைக்க இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.
எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யாமல் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் எதிர்க்கட்சிகளின் செயல்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 இடங்களை வென்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்'' எனத் தெரிவித்துள்ளார். மேலும், “தேர்தலில் காங்கிரசுக்கு தற்பொழுது உள்ள எம்.பிக்கள் எண்ணிக்கை கூட கிடைக்காது. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.