தூத்துக்குடியில் நலமான வாழ்வுக்காக போராடியவர்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஒருவழியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு மக்களுக்கான போராட்டம் வெற்றிபெற்றிருந்தாலும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சமூக விரோதிகளாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
இந்த துயரமான சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி ஒரு கண்டனம் இல்லை, ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் மவுனம் காக்கிறார். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்தால் அவருக்கு கஷ்டமாக இருக்கும். தூத்துக்குடியெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியாது என குஜராத் எம்.எல்.ஏ. அல்பேஷ் தாகூர் கூறியது, இங்குள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலித்தது.
இன்று இந்தோனிஷியாவிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். தலைத்தூக்கும் உலகத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்று தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
ஏழு பேரை பலிகொண்ட அந்தத் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கலாம்; தப்பில்லை. இந்தோனிஷியாவில் வாழ்பவர்களும் மக்கள்தான். அதற்காக சொந்தநாட்டு மக்கள் செத்து மடிகையில் மவுனம் காப்பது, அதை ரசித்துக் கொண்டாடுவதற்குச் சமம் என்பதை அறியாதவரா மோடி. பருவமழையின் தாக்கத்தால் வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகத்திற்கு, பா.ஜ.க.வின் தென்னிந்திய நுழைவுவாயிலிற்கு இதோ குரல்கொடுத்துவிட்டீர்கள். உங்கள் குரலுக்காக இங்குள்ள மக்கள் ஏங்கவில்லை என்றாலும், இந்தியாவும் தமிழகமும் வெவ்வேறானவை என்பதை அந்த மவுனம் உணர்த்துகிறதே மிஸ்டர் மோடி?