நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.5 சதவிகித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தாலும் மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. மேலும் நகர பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நல்ல வரவேற்பு பெற்றது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களை கவர்ந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருந்தது. இந்த நிலையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டவர் சம்பத் ராமதாஸ்.
இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். மேலும் தேர்தல் நேரத்தில் நோட்டீஸ், பிளக்ஸ் ஆகியவற்றை அங்கு இருக்கும் பல கடைகளில் அடித்துள்ளார். பிரச்சாரத்தின் போது வாடகைக்கு வாகனங்கள், ஒலி பெருக்கி மற்றும் தேர்தல் பணிகளுக்கான அனைத்து செலவுகளையும் அங்க இருக்கும் நிர்வாகிகளின் உதவியோடு செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட அனைத்து செலவுகளுக்கும் காசோலை வழங்கியுள்ளார். இதில் பல காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது என்று புகார் செய்துள்ளனர்.
பின்பு அனைவருக்கும் எப்படியாவது பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் தற்போது வரை பணம் வந்து சேராததால் கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளனர். பின்பு விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சம்பத் ராமதாஸ் கூறினாராம். அதைத் தொடர்ந்து சிலர் தஞ்சை போலீசில் புகார் செய்து உள்ளனர். இதை அறிந்த வேட்பாளர் புகார் கொடுத்தவர்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்து செட்டில்மென்ட் செய்து புகாரை வாபஸ் வாங்க வைத்து விட்டார். பணம் கிடைக்காத மற்றவர்கள் இன்னும் ஒருவாரத்தில் பணம் தரவில்லை என்றால் நாங்களும் புகார் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.