நடந்துமுடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி (23.12.2019) அன்று நடந்தது.அதில் பாஜக கட்சி- 25 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ கட்சி- 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி- 1 இடத்திலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி- 1 இடத்திலும், சுயேட்சை- 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி- 16 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா- 3 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்- 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
இதில் காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்த கூட்டணி 46 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள மோஹ்ராபதி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், அம்மாநில முதல்வராக இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன் பங்கேற்றார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு எம்.பி, கனிமொழி எம்.பி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தனது முதல் அலுவலக பணி நாளன்று பா.ஜ.க. அரசு ஆயிரக்கணக்கான மக்கள் மீது போட்ட வழக்குகளை திரும்ப பெறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். பதல்கரி இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் சந்தல் பர்கானா குத்தகை மற்றும் சோட்டானக்பூர் குத்தகை சட்டம் ஆகிய இரட்டை குத்தகை சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதா 2016 ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த முறையில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு வழக்குகள் போட்டது. தற்போது அந்த வழக்குகளைதான் ஹேமந்த் சோரன் திரும்ப பெற்றுள்ளார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே பாஜக போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான கையெழுத்து போட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.