திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய தோப்பு வெங்கடாசலம், ''நாங்களெல்லாம் ஸ்டாலின் அவர்களை தேடி உங்கள் பாசறைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் நிதியைத் தேடி வரவில்லை உதயநிதியை தேடி வந்திருக்கிறோம். நீதி இங்குதான் இருக்கிறது என்று வந்திருக்கிறோம். தமிழகத்தின் மாபெரும் சத்தியாக திமுக இருந்தாலும் கூட ஈரோடு மாவட்டத்தில் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை என்கின்ற உங்கள் மனதில் இருக்கின்ற ஏக்கத்தை போக்குவதற்காக ஒரு அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம். எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற பேரூராட்சியாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் 100 சதவீத வெற்றியை ஸ்டாலினின் பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய ஒரே வேலையாக இருக்கும்.
தூங்குகிற நேரத்தை தவிர உங்களுக்காக பணியாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கோ இருந்து வந்தாலும் கூட தமிழகத்தின் முதலமைச்சர் என்கின்ற ஒரு மாபெரும் பொறுப்பில் இருக்கிற உங்கள் அருகே நிற்க முடியுமா என்று ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த சாதாரண தொண்டனை உங்கள் அருகில் இருக்கையை போட்டு தோளில் தட்டிக் கொடுக்கின்ற ஒரு தாய் உள்ளம் கொண்ட தலைவர்.
இனிமேல் ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த நண்பர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களிடம் ஒரு கோரிக்கையை இப்பொழுது வைக்க விரும்புகிறேன். அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாற்று அரசியல் கட்சியை சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உட்பட பல பேருடன் திமுகவில் இணைந்துள்ளேன். ஈரோடு மாவட்டத்தில் இருபத்தையாயிரம் தொண்டர்களை திமுகவில் இணைப்பதற்கு ஸ்டாலின் அனுமதி கொடுக்க வேண்டும்'' என்றார்.