காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், பிஹாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் மணிப்பூரில் நிதிஷ்குமார் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நிதிஷ்குமார் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சியைத் தொடங்கி, மீண்டும் பாஜகவுடன் இணைந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திலும் ஐக்கிய ஜனதாதள கட்சியிலிருந்து 6 பேர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்தை சந்தித்து பேசி பாஜகவில் இணைந்தனர். மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பாஜகவிற்கு 20 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்களும் இருந்தனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து 8 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக மாறியுள்ளது.