திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தேன்மொழி சேகர். இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்துவருகின்றன. அந்தக் கோரிக்கை விவாதத்தில், கேள்வி நேரத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி சேகர், “நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வத்தலக்குண்டு பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும்” என கேட்டார்.
இதற்கு பதில் அளித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “தமிழகத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களும் புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிலக்கோட்டை தொகுதிக்காக எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருக்கிறார் என அத்தொகுதி அதிமுகவினர் சமூவலைதளங்களில் தேன்மொழி சேகர் பேசியதை வைரலாக்கிவருகின்றனர்.
அதேசமயம், திமுகவினர் ‘தொகுதிக்குள் என்ன நடக்கிறது, என்ன திட்டங்கள் நடக்கிறது என்றுகூட தெரியாமலா ஒரு எம்.எல்.ஏ இருப்பார்’ என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ. மீதான திமுகவின் விமர்சனம் குறித்து விசாரித்தபோது, ‘மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பொதுப் பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு வத்தலக்குண்டு கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது கட்டிடமே வருவாய்த்துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது’ என்று தெரிவித்தனர்.