இது சாதாரணமான நேரம் அல்ல; கரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிகாட்சி வழியாக 16.05.2020 சனிக்கிழமை நடந்தது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரோனா மாதிரியான கொடிய நோய்த் தொற்றை இதுவரைக்கும் நாம் பார்த்தது இல்லை. அதனால் இதுவரை நடத்தப்படாத வகையில் இன்றைய (நேற்று) தினம் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது என்று சொல்லி, வீட்டுக்குள் முடங்கி இருக்கவில்லை தி.மு.க.; முன்களத்தில் நின்று முயன்று அயராது பணியாற்றினார்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஊரடங்கை அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வாழ்வாதாரத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை. உழலும் தமிழ் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகக் கவலைப்பட்ட ஒரே இயக்கம் தி.மு.க.தான். முக கவசங்கள், கிருமிநாசினி திரவம், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள், பல்வேறு இடங்களில் நிதி உதவிகள் என மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கியதாக மாவட்டச் செயலாளர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
அவர்களுடைய இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கவே, “ஒன்றிணைவோம் வா” என்ற செயல்திட்டத்தை அறிவித்திருந்தோம். எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டுமே செய்ய முடிந்தவை. அரசாங்கம் செய்ய வேண்டிய காரியங்களை மொத்தமாகத் தொகுத்து, சென்னையில் தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளார்கள். இந்தக் கோரிக்கைகளை படிப்படியாக அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதல்-அமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? என்ற ஐயப்பாடே எழுகிறது. அந்தளவுக்கு மக்கள் எல்லா வகையிலும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், 3 மாத காலத்திற்குப் பிறகு, தமிழக அரசு இன்னமும் மெத்தனமாகவும், மேம்போக்காகவும் செயல்படுவதை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆதங்கத்துடன் சுட்டிக் காட்டினார்கள்.
இயன்றதைச் செய்தோம் இல்லாதவர்க்கு. அரசாங்கம் செய்ய வேண்டியதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்த மகத்தான பணி, இனிவரும் நாட்களிலும் தொய்வின்றித் தொடரும். இப்பணியைக் களத்தில் நின்று செவ்வனே ஆற்றிய மாவட்ட செயலாளர்களுக்கும், அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து துணை நின்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
இது சாதாரணமான நேரம் அல்ல; கரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். பேராபத்துக் காலத்தில் தி.மு.க. எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம். தி.மு.க. நிர்வாகிகள் எத்தகைய தொண்டுள்ளத்துடன் செயல்படும் வீரர்கள் என்பதைத் தலைமைக்கும் காட்டி இருக்கிறார்கள்.
இன்னும் நம் முன் ஏராளமான பணிகள் எதிர்பார்த்து அணிவகுத்து நிற்கின்றன. அப்பணிகள் குறித்த திட்டமிடுதல்களுடன் இன்றைய மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். முன்னெப்போதும் போலவே, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போற்றி, கரோனா காலக் களப்பணிகளும் தொய்வின்றித் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.