திமுக கூட்டணியின் புதுச்சேரி மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து புதுச்சேரியிலும், கடலூர் தொகுதியிலும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மற்றும் சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து கடலூர் தொகுதி குறிஞ்சிப்பாடியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
![stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/yBsUyJn7H6KSZSZEIzr3s9aPP3kOaf3sPaflZq_Inn8/1555049861/sites/default/files/inline-images/stalin_95.jpg)
அக்கூட்டங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "மத்தியிலுள்ள பாசிச பாஜக அரசை அகற்றுவதற்கான தேர்தல் இது. பாஜக 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என சொன்னார்கள். ஆனால் ஒருவருக்குகூட வேலை கொடுக்கவில்லை. வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும் என சொன்னார்கள். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே வடிவேல் கூறுவது போல் வரும் ஆனா வராது. 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிட வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ. மோடி தற்போது மக்களின் அனுதாபத்தை பெறதான் ஒரு ஏழைத்தாயின் மகன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஏழைத் தாயின் மகன் ஏழைகளை பரம ஏழைகள் ஆக்கிக் கொண்டிருக்கிறார். பணக்காரர்களை பெரும் பணக்காரர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார். 'மன்னர் குடும்பத்தைச் சார்ந்த ராகுல்காந்தி, ஏழைத்தாயின் மகனான தன்னை ஏளனம் செய்கிறார்' என்கிறார் மோடி. ஆனால், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் விவசாயிகளைப் பற்றி கவலைப்படுகிறார், ஏழைகளை பற்றி கவலைப்படுகிறார். ஆனால், டீ வித்து பிரதமர் ஆன மோடி பணக்காரர்களுக்கு பாதுகாவலராக உள்ளார்.
கலைஞர் மறைந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தியது. ஆனால் முதல்வர் நாராயணசாமி வெண்கலச்சிலை, சாலைக்கு பெயர், பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என புதுச்சேரியில் கலைஞருக்கு பல சிறப்புகளை அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி இவர்கள் மூவரும் நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தேர்தலோடு திமுக முடிந்துவிடும், அழிந்துவிடும் என சிலர் கொக்கரிக்கிறார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சி திமுக ஆட்சி, ஆனால் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக ஆட்சி. மோடியின் ஆட்சியும் எடப்பாடி ஆட்சியும் அகற்றப்பட வேண்டிய ஆட்சிகள், அகற்றப்படவேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.