Skip to main content

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்! -கௌதமனின் தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
tamil perarasu katchi

 

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

 

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் கௌதமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...

 

1. வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய  விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. 

 

2. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது மனித குலத்திற்கே எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 

 

3. கொரோனா நிறைந்த காலக்கட்டத்தில் தங்களது உயிரைத் துச்சமாக மதித்து களப்பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

 

4. தங்களை மக்களுக்கான அரசு என்று பிரகடனப்படுத்தும் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து எட்டு வழி சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும். மற்றும் கையகப்படுத்திய நிலங்களை உடனடியாக உரியவர்களிடம்  திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசினைத் தமிழ்ப் பேரரசு கட்சி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. 

 

5. அனிதா மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட பனிரெண்டுக்கும் மேற்பட்ட எங்கள் தமிழ்ப் பிள்ளைகளின் உயிரை பலி வாங்கிய நீட் என்கிற எமனை மத்திய அரசு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

 

6.தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்க்கமாக முடிவெடுத்து அறிவித்தது போலவே அவர் வழியில் நின்று ஆட்சி செய்யும் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். ஐநா உள்ளிட்ட உலகத்தின் பெரும் நீதிமன்றங்களில் தமிழீழப் பிரச்சினைகளில் தொடர்ந்து நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து தமிழீழ தீர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

 

7.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின்  விடுதலையை உறுதிப்படுத்தாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நீதியினை நிலைநாட்டி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொள்கிறது.

 

8. நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வல்லரசு நாடுகளோடு சேர்ந்து மேலை நாடுகளும் வாக்கு எந்திரத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு வாக்குச்சீட்டு முறையினைப் பயன்படுத்துவது போல் இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இருந்தாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி வலியுறுத்துகிறது. 

 

9. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது, கூட்டணி குறித்த நிலைபாடுகள் என இவை அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படுகிறது.

 

10. மதவாதம், இனவாதம், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ் மண்ணில் கலவரத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராகவும் கட்சிகளுக்கு எதிராகவும் தமிழ்ப் பேரரசு கட்சி இறுதிவரை உறுதியுடன் போராடும். 

 

11. தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருந்து திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் மண் வளம், தமிழர் மேம்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளைப் பேணிப் பாதுகாக்கின்ற வகையில் எங்களைப்போன்ற கள வீரர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி அன்போடு கேட்டுக் கொள்கிறது. 

 

12. இந்திய ஒன்றியத்திலுள்ள மற்ற மாநிலங்கள்  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கே 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரை வேலை வாய்ப்பு என உறுதிசெய்து சட்டம் இயற்றியது போலவே தமிழ்நாடு அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம் இயற்றி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்