ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இது இடைக்கால ஏற்பாடு மட்டும்தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” எனக் கூறியிருந்தது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாகத் தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் திங்களன்று கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொது வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான படிவத்தையும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்டுள்ளார். இந்தப் படிவத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர், அவர்கள் வகிக்கும் பதவி, அவர்களது உறுப்பினர் எண் மேலும் அவர்களது விவரங்களைப் பதிவு செய்து அதன் பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு போட்டியிடுவதற்கு முழுமனதுடன் ஆதரிக்கிறேன் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டு அதிமுக தலைமைக் கழகத்திற்கு வழங்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2600க்கும் மேற்பட்டோருக்கு இந்தப் படிவம் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இதில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளர் ஆதரவை ஒருங்கிணைத்த அறிக்கையாகத் தயார் செய்து அதை திங்கள் காலை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்ப்பிப்பார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90% பேர் இபிஎஸ் அணியில் இருப்பதன் காரணத்தினால் தென்னரசு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி இந்தப் படிவம் தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குத் தபால் மூலம் அல்லது நேரில் படிவத்தை வழங்க திட்டம் இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். தொடர்ந்து, பொது வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை நாளை மாலை 7 மணிக்குள் அனுப்ப வேண்டும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.