தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.
அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.
“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.
அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.
இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.