இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கஜா புயல் பாதித்திருக்கும் பகுதியான திருவாரூரில் முழுமையாக நிவாரணப் பணிகள் முடியாத நிலையில் அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தும்போது அதிகாரிகள் தேர்தல் பணியில் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். அதன் மூல்ம் நிவாரணம் பணிகள் பாதிக்கப்படும். அதனால் இடைத்தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என்ற மனு ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.
தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதா, தேர்தலால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படுமா, தேர்தலை நடத்த முடியுமா, முடியாதா என்று ஆய்வு செய்து அறிக்கையை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் ‘திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கையை அனுப்ப வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.