அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் தற்பொழுது வரை சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில் எடப்பாடியை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பல்வேறு விமர்சனங்களை ஓபிஎஸ் மீது வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவண பாண்டியன் என்பவரை காணவில்லை என்றும், அவரை போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகழேந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''அதிமுகவைச் சார்ந்த தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவண பாண்டியன் விசாரணை என்கின்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் தரம் தாழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இன்றைய தினம் அவர் அளித்த பேட்டியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்க்கையை முடித்து விடுவதாக பேசியிருக்கிறார். முன்னதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் வீட்டை சூறையாடுவதாக பேசி இருக்கிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. சரவண பாண்டியன் பேசியதாக விசாரணை என்கின்ற பெயரில் அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். யார் அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை காவல்துறையினரா அல்லது கடத்தி செல்லப்பட்டாரா என்பது புரியவில்லை. உடனடியாக காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும். அவர் குடும்பத்தாரும் நண்பர்களும் கழகத்தினரும் அவர் எங்கே இருக்கிறார் என்று புரியாமல் தேடி வருகிறார்கள்'' என தெரிவித்துள்ளார்.