நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் கடந்த முறை கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தொகுதி திமுகவினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். ஆனால் அவர் கூட்டணி தொண்டர்களை கண்டுகொள்வதில்லை என்றும், அப்பகுதி மக்களுக்கு எதுவும் பயன் உள்ள வகையில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வினரும், அப்படி ஒதுக்கினால் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்றும் அவரது சொந்தக்கட்சியினரே முனுமுனுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் சிவகங்கை தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க...! நெட்ப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டும், சமூக ஊடகங்களில் மோடியைப் புகழ்ந்து கொண்டும், தொகுதியை மறந்து சுற்றித் திரியும் அவரை(கார்த்தி சிதம்பரம்) கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.