கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இந்த பகுதியில் வெங்கடேஸ்வரா கல்வியியல் வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்படவுள்ளது. இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் சி.வி. கணேசன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது. அந்த கட்சி அதற்காக போராட வேண்டும். இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறேன். இந்த போராட்டத்திற்கு ஒரு உதயநிதி ஸ்டாலின் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் போராட்டம் நடத்தினோம்.
அந்த போராட்டத்தின் தலைமையாக சென்னையில் அறப்போராட்டம் நடந்தபோது, ஒரு அமைச்சராக இருக்கும் போது போராட்டம் நடத்தினால் அமைச்சர் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கூறினர். அதேபோல், அதிமுக வழக்கறிஞர் ஒருவர், என்னை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். ஆனால், எனக்கு இந்த அமைச்சர் பதவி எல்லாம் முக்கியம் கிடையாது. தமிழக மாணவர்களின் உயிர் தான் முக்கியம்.
இந்த பதவி, பொறுப்பு, அமைச்சர் பதவிக்காக திமுக தொடங்கப்படவில்லை. மாநில கல்விக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தொடங்கப்பட்டது தான் திமுக என்பதை அனைவரும் உணர வேண்டும். நீட் தேர்வு விலக்குப் பெறுவது தொடர்பாக திமுக உறுதி அளித்தது உண்மைதான். அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த உறுதிமொழிக்கேற்ப உண்மையாக போராடி வருகிறேன்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 ஆண்டுகளாகியும் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி இந்தியாவில் இருந்த நாள்களை விட வெளிநாட்டில் இருந்த நாள்கள் தான் அதிகம். ஒன்றிய பா.ஜ.க அரசு ரூ.7 1/2 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. ரமணா பட பாணியில் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தை இறந்து போன 88 ஆயிரம் கோடி பேருக்கு கொடுத்து ஊழல் செய்துள்ளார்கள். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈ.டி.க்கும் பயப்பட மாட்டோம். ஏனென்றால் தமிழகத்தை மு.க. ஸ்டாலின் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
மோடியால் வளர்ந்தது ஒரே குடும்பம் அதானி குடும்பம் தான். அவர்கள் ரயில்வே, விமான சேவை, ஸ்டேடியம் என அனைத்தையும் அதானியிடம் ஒப்படைத்து விட்டார்கள். தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப் பாம்பு எனும் பா.ஜ.க நுழைய பார்க்கிறது. வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எனும் அடிமைகளை விரட்டி பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்பி நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.