தன்னை சந்திக்க வருபவர்கள் இனி சால்வை மற்றும் பூங்கொத்துகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்கள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதன்படியே நடந்து வருகிறார். தனக்கு வந்த புத்தகங்களில் 1350 புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறையின் பொது நூலகத்திற்குப் பரிசாக வழங்கியுள்ளார்.
இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்றதும் அவ்வாறு அறிவித்து தொடர்ந்து செயல்பட்டும் வந்தோம். ஆனாலும் சால்வை கொடுப்பதும் பூங்கொத்து கொடுப்பதும் தொடரத்தான் செய்கிறது. சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்தகட்டத்திற்குச் செல்ல பழைய நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் அளித்து தொழிற்பயிற்சி அளித்து வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகிறது.
எனவே, என்னைச் சந்திக்க வரும் திமுகவினர் இனி மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களைப் பரிசாக வழங்கலாம். அவற்றை ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.