மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சமூக நீதி பற்றிப் பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி பற்றி அம்பேத்கர் கூறியது என்னவென்றால் அணைத்து கடைக்கோடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் எண்ணமாகவும், கொள்கையாகவும் இருந்தது. ஆனால் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்?. இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்? அவரது கட்சி ஒரு சிறியது. அவரை அந்த அமைப்புக்கான தலைவராகத் தான் நான் பார்க்கிறேன்.
அவர் ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவர் என்றால் அவர் அனைத்து தலித் மக்களையும் திருமாவளவன் ஓரே பார்வையில் பார்க்க வேண்டும். எனவே அவரின் உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடியில் உள்ள அனைத்து தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் எண்ணம். அதுதான் அவரின் கோரிக்கை. அதற்காகத்தான் அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்கின்ற அளவிற்குச் செய்து கொண்டிருப்பது தான் திருமாவளவன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு எம்.எல்.ஏ. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் இந்த நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடா அல்லது அவரது நிலைப்பாடா?. கடந்த 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்த போது அதை சட்டப்பேரவையிலும் வெளியிலும் ஆதரித்த இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள். அதனால் தான் இன்று வரை அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல; கிரிமிலேயருக்கு எதிரானது. ஓபிசி சமூகத்துக்கு கிரிமிலேயர் மூலம் சமூகநீதிக்கோட்பாட்டை சிதைக்கும் பாஜகவின் சதியை அம்பலப்படுத்தி எதிர்த்து வரும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்.
அதே போல,தலித்துகளுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூகநீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதால், முருகன் காழ்ப்புணர்ச்சியில் சமூகநீதி என உளறுகிறார். இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்தது தான். ஆகவே, விடுதலைச்சிறுத்தைகளுக்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது. அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலைச்சிறுத்தைகள் ஆதரித்தாலும் முருகன் தொடர்ந்து அவதூறையே பரப்பி வருகிறார். புதிய தமிழகம், இந்தியக் குடியரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர்களைக் கண்டிக்காமல் விடுதலைச்சிறுத்தைகளையே குறிவைப்பது ஏன்?.
ஏனென்றால், விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தில் தான் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் களமாடுகிறார்கள். இந்த கோபத்தில் தான் விடுதலைச்சிறுத்தைகள் மீது வெறுப்பைக் கொட்டுகிறார். விடுதலைச்சிறுத்தைகள் ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கிப் பயணிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.