Skip to main content

“தினமும் கிருமிநாசினி தெளித்து பள்ளியை சுத்தம் செய்யவில்லை என்றால் நடவடிக்கை..” அமைச்சர் செங்கோட்டையன்

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

minister sengottaiyan addressed press on erode

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடையாக்கவுண்டன்புதூரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வடிவில், 384 வீடுகள் கட்டப்படும் கட்டடப் பணியைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 1ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிவைத்தார். 

 

பிறகு விழாவில் பேசிய அவர், "சாலைப் பணிகளைக் காட்டிலும் மக்கள் குடியிருப்பு முக்கியம் என்ற நிலையில் இந்தத் திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று, குடிசையில் வாழ்ந்துவரும் மக்கள் மாடி வீட்டில் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்கும் 5 ஆயிரம் பேருக்கு நிலையாக சொந்த வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை சீரோடும் சிறப்போடும் நமது எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகிறது. சென்னை சென்று பீச்சில் காற்று வாங்கியதை மாற்றி, கோபி அருகே உள்ள கொடிவேரி அணையிலேயே செயற்கை பீச் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் சமநிலையில் வர வேண்டும் என்ற நோக்கில்தான் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியளார்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாங்கள் மக்களுக்கு செய்து கொடுத்த எங்கள் வேலையைக் கூறுகிறோம். பள்ளிகள் முழுமையாக திறப்பது குறித்து முதல்வர்தான் அறிவிப்பார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பிறகே அறிவிக்கப்படும். நீட் தேர்வில் 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர்தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். 

 

ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவது என்பது மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதற்குப் பிறகு மத்திய அரசு அறிவிப்புபடியே தடுப்பூசி போடப்படும். பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமினாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

 

மேலும், "சசிகலா விடுதலையாகிவிட்டார்கள்; அவர்கள் தமிழகம் வரும் போது...." என செய்தியாளர் கேட்டதற்கு, பதில் ஏதும் கூறாமல் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துகொண்டு புறப்பட்டார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர், முன்னாள் சிட்கோ வாரியத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்