மதுரை திருப்பரங்குன்றத்தில், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்து அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஆ.ராசாவின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் ஓட்டுக் கேட்டு வரலாம். கமல்ஹாசன் வந்தால் கூட்டம் கூடும், ஓட்டு வருமா என்பதுதான் கேள்வி. தே.மு.தி.க கட்சியின் திறமையைக் காண்பிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் பேசுகிறார். அ.தி.மு.க ஒரு திறந்த புத்தகம். பத்தாண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறோம்.
1996ல் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிராகக் குரல் கொடுத்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், தி.மு.க.விற்குத்தான் மிகப்பெரிய பாதிப்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என எந்த நடிகர் வந்தாலும், அ.தி.மு.க.விற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.
தமிழகத்தில் எடப்பாடியார் அலை உருவாகி இருக்கிறது. ஸ்டாலினை பொருத்தவரை எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று பேசிவருகிறார். அவர்கள் ஆட்சிக் காலத்தில் புயலால் பாதிக்கப்பட்டபோது, நிவாரணம் எப்படிக் கொடுத்தார் என்று அனைவருக்கும் தெரியும். ஸ்டாலின் பேசிய கருத்துக்கு, முதல்வர் பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை” இவ்வாறு பேசினார்.