இந்தியா முழுவதும் லாக் டவுன் தொடர்பாக, பிரதமர் மோடி சொல்வதை எல்லாம் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் எதிர்பார்ப்பதைத்தான் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.. மேலும் ஏப்ரல் 14-ந் தேதி, தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, மக்கள் எதிர்பார்க்கும் எதையுமே அறிவிக்காமல், இரண்டாவது முறையாக மே 3-வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார். ஏற்கனவே 21 நாள் ஊரடங்கின்போது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள் எதையும் வங்கிகள் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. உதவித்தொகையும் அக்கவுண்ட்டுக்கு முறையாக வரவில்லை என்று கூறுகின்றனர்.
அதே போல் மக்களைப் பயமுறுத்தும் மின்கட்டணம், செல்போன் மற்றும் இணையதளக் கட்டணங்கள் என்று எதையும் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தரக் குடும்பத்தினரின் கையிருப்பும் கரையும் நிலையில், 18 நாள் லாக் டவுனைப் பிரதமர் அறிவித்துள்ளார். நிதி நெருக்கடி சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எப்படி சம்பளத்தைக் கொடுக்க முன்வரும்? அரசின் உதவிகள் எந்த அளவுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வரும் என்பதை எதிர்பார்த்திருந்த மக்கள், மோடியின் உரையில் நிவாரண அறிவிப்பு வரும் என்று காத்திருந்தார்கள். ஆனால் இந்த முறையும் ஏமாற்றம்தான். அதோடு பிரதமர் மோடி முதியோரைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், மாஸ்க்கை மாட்டிக் கொள்ளுங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று 7-அம்சத் திட்டத்தை மட்டும் அறிவித்து விட்டுச் சென்றது பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.