Skip to main content

“ஒன்றல்ல.., ஓராயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் முடியாது” - அமைச்சர் சேகர் பாபு

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

 Minister Sekarbabu spoke about Amit Shah

 

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை கோவிலம்பாக்கத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்தாலோசனை நடத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறினார். 

 

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  “அமித் ஷா சொன்னது போல நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிடட்டும். தேர்தலில் போட்டியிட்ட பிறகு தான் முன்வைப்பு தொகைக்கே அவர்கள் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தான் தமிழகத்தில் பாஜகவின் நிலைமை உள்ளது. 

 

மேலும், தமிழக முதல்வரின் மக்கள் பணியை முழுவதுமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் வென்று 40 தொகுதிகளும் தமிழக முதல்வரின் வசம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும், ஒரு அமித் ஷா அல்ல, ஓராயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் முதல்வரின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கும் தமிழக மக்களை அசைத்துப் பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்