ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில், நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடைபெறாது என்றும் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த கிருஷ்ணசாமி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பெற்றார். அந்த தொகுதியில் தனிச் சின்னத்தில் நின்று போட்டியிடுகிறார்.
அதிமுகவுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டவுடன், ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தொடர்ந்த மனுவை வாபஸ் பெற முடிவு செய்தார். அதன்படி அந்த வழக்கை திரும்பப்பெறுவதாக மனு அளித்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அந்த வழக்கை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.