காங்கிரஸ் கட்சி சரிந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம், இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி உருவெடுத்தாலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதன்காரணமாக ஆர்.ஜே.டி கட்சி ஆட்சியமைக்க முடியாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், "காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமான தலைவர்கள், அனுபவமான மனநிலை உள்ளவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். நாம் சரிந்து கொண்டுள்ளோம் என்பதைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் பல நிலைகளில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கட்சி சார்ந்த விஷயங்கள், ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் யார் பேச்சைக் கேட்க விரும்புகிறார்களோ அவர்களை நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்றவை அவசியம். தற்போது முடிந்த தேர்தலில் பல ஊர்களில் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் 2 சதவீத வாக்குகள்தான் இடைத்தேர்தலில் கிடைத்தன.
காங்கிரஸ் கட்சிக்குள் என்ன தவறு நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அமைப்புரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பதும் தெரியும், எங்களிடமே பதிலும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்துப் பதில்களும் தெரியும். ஆனால், அவர்கள் அதை ஏற்க விருப்பமில்லை. அனைத்தும் நன்றாக உள்ளன என்று நம்புகிறார்கள். இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். காங்கிரஸ் கட்சியை மக்கள் வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.