
கோவையை திமுக அரசு புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டியும் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில் கோவை சிவானந்தா காலணியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதன்படி இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேடையில் பேசுகையில், ''கோவையில் மிகப் பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்தாவது திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து மக்களுக்கு நன்மையாற்ற வேண்டும். பத்தாண்டு அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. அந்த ஆட்சியில்தான் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு கொடுத்தார்கள். அவரின் மறைவுக்குப் பிறகு அவரது வழியில் என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தந்தோம். அதிமுகவை குறைசொல்ல ஒரு தகுதி வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எஸ்.பி.வேலுமணிக்கு பழச்சாறு கொடுத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முடித்து வைத்தார். இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.