வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட அமைப்பினருடன் ஆலோசனை நடத்துவதற்கு உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டியது தானே? உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆம்பூரில் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, நாகநாதசுவாமி கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில் கூட்டணியை சேர்ந்த காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆம்பூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் இதர முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று மதியம் அந்த மண்டபத்திற்கு வந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆம்பூர் தாசில்தாருமான சுஜாதா மற்றும் வருவாய்த்துறையினர், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக கூறி மண்டபத்திற்கு சீல் வைத்தார்.
தாசில்தார் சுஜாதா, இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதனால், தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூடியதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், மண்டப உரிமையாளர் ஜக்கிரியா, ஹ்லசுன்னத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இதர நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து இன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.