தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில், நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரை பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இன்று சந்திக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இன்று காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதன் பிறகு அவர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.