Published on 06/02/2020 | Edited on 06/02/2020
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா எம்.பி. இணைந்தார். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் சசிகலா புஷ்பாவின் வருகை தமிழக பாஜகவை வலுப்படுத்தும் என்றார். அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெ. ஆட்சிக்காலத்திலேயே பல பிரச்சனைகளை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா, பா.ஜ.க.வின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவர் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் 2-ந் தேதி அவர் பா.ஜ.க.வில் சேர்ந்தார் என்கின்றனர். இது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கைக்கு உரியது என்ற போதும், சபாநாயகரிடம் அவர் மீது புகார் கொடுத்து, பா.ஜ.க.வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாத அ.தி.மு.க. தலைமை, புஷ்பா விவகாரத்தைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிக்கொண்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனத்தின் போது, முக்கியமான பதவி தரப்படும் என்று பா.ஜ.க. தரப்பு சசிகலா புஷ்பாவுக்கு உறுதிமொழி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.