தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ உண்மையாகவே பிடிஆர் பேசியதுதானா? என்ற கேள்விகள் எழுந்தன. மறுபுறம், இது சித்தரிக்கப்பட்ட ஆடியோ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் வந்தனர்.
அதைத் தொடர்ந்து, அண்ணாமலை முதன்முதலாக வெளியிட்ட ஆடியோ குறித்து பி.டி.ஆர் தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதில் அந்த ஆடியோ குறித்து ஆய்வு செய்த ஃபாரன்சிக் ஆதாரங்களையும் இணைத்திருந்தார். மேலும், அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதன் பின் அண்ணாமலை பாஜக குறித்து தவறாகப் பேசுவது போலவும் ஆடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை மீண்டும் அமைச்சர் பி.டி.ஆர். பேசுவது போல் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவிற்கு அமைச்சர் பி.டி.ஆர். தனது ட்விட்டர் பதிவில் காணொளி வாயிலாக விளக்கம் கொடுத்திருந்தார். அந்த காணொளியில் ஒபாமா, ட்ரெம்ப் போன்ற உலகத் தலைவர்களின் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுத்துக்காட்டுகளாகக் காட்டியிருந்தார். அதேபோல், ஆடியோவிற்கு மறுப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் அமைச்சர் பி.டி.ஆர். ஆடியோ விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.
கேள்வி: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி..?
பதில்: “இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியா இருக்கு. மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.