உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எம்.எல்.ஏ. குமரகுருவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தக் கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எம்.எல்.ஏ. குமரகுரு வந்தனர். ஏற்கனவே மாவட்ட எல்லைகளைப் பிரித்து வரையறை செய்தபோது இந்தக் கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் பல கட்டப் போராட்டங்களையும் உதாசினப்படுத்தி விட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இந்தக் கிராமத்தை மட்டும் இனைத்ததால் கடும் கோபத்தில் இருந்த இந்த மக்கள், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வை பார்த்தவுடன் அவர்களை முற்றுகையிட்டு, அவர்களது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்களுடைய கிராமம் வஞ்சிக்கப்பட்டதால், தற்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்யக்கூட வழியில்லாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி ஆவேசமடைந்தனர். இதனால் அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் நிகழ்ச்சியைப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.
கிராம மக்களின் எதிர்பை முன்கூட்டியே காவல்துறையினர் அறிந்ததால், டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்கள் பொதுமக்களைச் சமாதானம் செய்தனர்.