அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே ஒன்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தற்பொழுது வரை கருத்து முரண்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்திருந்தார். அதேபோல் எடப்பாடி தரப்பு பண்ருட்டி ராமச்சந்திரனை பெரியதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் இன்று முதல் பண்ருட்டி ராமச்சந்திரன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.