பாஜக ஆளும் மாநிலங்களில் இதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்கள் முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை இருக்காது. அதற்கு முதல் கையெழுத்தினை பாஜக அமைச்சர் போடுவார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலையின் கருத்துகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், “கோவில்களுக்கும் வழிபாட்டு தளங்களுக்கும் சம்பந்தமான சொத்துகளை பலர் மதத்தின் பெயரைச் சொல்லி அபகரித்து வைத்திருந்தார்கள். அது இன்றைக்கு தமிழக அரசால் மீட்டு எடுத்து தமிழக கோவில்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. இது அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று. பாஜகவை பொறுத்தவரை என்றைக்கும் உண்மை பேசாது. குஜராத்திற்கு ஒரு நியாயம் இங்கு ஒரு நியாயம் என்று தான் பேசுவார்கள். ஏன் அவர்கள் கைகளில் இருக்கக்கூடிய மாநிலங்களில் இத்தகைய ஒரு சூழலை அவர்கள் உருவாக்கவில்லை. உருவாக்கமாட்டார்கள். இது ஒரு வெற்றுப்பேச்சு. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அறநிலையத்துறையின் கீழ் தான் கோவில்கள் இருக்கிறது” எனக் கூறினார்.