திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ளது அமைச்சர் வீரமணியின் பாரம்பரிய வீடு. அமைச்சர் வீரமணியுடன் பிறந்த அண்ணன் – தம்பிகளுக்குள் சொத்து தகராறு நடந்து வருகிறது. இதில் தங்கவேல் பீடி கம்பெனி வீரமணி குடும்பத்தார்க்கு சொந்தமாக உள்ளது. இந்த பீடி கம்பெனியை மையமாக வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பீடி கம்பெனி அமைச்சர் வீரமணியின் சகோதரரான ராவணன் குடும்பத்தார்க்கு பங்காக செல்கிறது. இதை விட்டுத்தர மற்றொரு சகோதரரான கே.சி.அழகிரி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மார்ச் 6ந் தேதி காலை இந்த பீடி கம்பெனிக்குள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதுப்பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்துவிட்டு நடத்திய விசாரணையில், ஒரு காரில் வந்த சிலர் பீடி நிறுவனத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசியதால் தீ பிடித்த தகவலை கண்டறிந்துள்ளனர். அந்த கார் பற்றிய தகவலை சிசிடிவி கேமரா மூலமாக கண்டறிந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை காவல்துறை மூடி மறைத்துவிட்டு தகவல் வெளியே லீக் ஆகாமல் விசாரணை நடத்திவருகிறது. யார் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என தெரியாது என சாதிக்கிறார்கள் ஜோலார்பேட்டை காவல்நிலைய அதிகாரிகளும், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும்.
சட்டமன்றம் நடைபெறுகிறது, இந்த நேரத்தில் அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு என்றால் விவகாரம் பெரியதாகிவிடும் எனச்சொல்லி விவகாரத்தை அமுக்குவதாக கூறப்படுகிறது.