Skip to main content

“அந்த ஆள் எல்லாம் ஒரு மனுசன்...” - இபிஎஸ் பேச்சை மேற்கோள் காட்டிய அமைச்சர் உதயநிதி

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

"That person is all a human..." Minister Udayanidhi quoted the EPS speech

 

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காந்தி சிலை, மரப்பாலம் அண்ணா டெக்ஸ்மேடு ஆகிய இடங்களில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 29ந் தேதி மாலை நடந்தது. இதில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறந்த வேனில் நின்றபடி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

 

அப்போது, அவர் பேசியதாவது: "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடந்தது. மார்ச் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நீங்கள் சொன்னபடியே தி.மு.க. தலைமையிலான இந்த அணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றிவிட்டீர்கள். ஈரோடு பிரசாரத்திற்கு வந்தபோது 2 நாள் தங்கி மக்களாகிய உங்களை சந்தித்து வாக்கு கேட்டேன். நீங்களும் வெற்றி உறுதி என தெரிவித்தீர்கள். நானும் பிரச்சாரத்தை முடித்து கொண்டு சென்னைக்கு சென்றேன். தலைவர் தமிழகத்தின் முதல்வர் தொலைபேசியில் அழைத்து ‘ஈரோடு பிரசாரத்திற்கு சென்று வந்தியே, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு’ என கேட்டார். நான் அவரிடம் குறைந்தது 45ல் இருந்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டிப்பாக ஜெயிப்பார். நம்முடயை தலைமையிலான கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என தெரிவித்தேன். தேர்தலுக்கு இரண்டு நாளுக்கு முன்னதாக தலைவர் முதல்வர் ஈரோட்டில் ஒரு நாள் பிரச்சாரம் செய்தார். அடுத்த நாள் நான் தலைவரிடம் தொலைபேசியில் அழைத்து, நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரசாரத்திற்கு சென்று வந்தீர்களே, எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என கேட்டேன். அதற்கு தலைவர் என்னிடம், குறைந்தது 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என சொன்னார்.

 

ஆனால், அதையெல்லாம் தாண்டி 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். இது உங்களுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி. கிட்டதட்ட ஒரு மாதம் அளவில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைச்சர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்தனர். அந்த பிரச்சாரத்தை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு போய் சேர்த்தீர்கள். தி.மு.க. அரசும், நமது தலைவரும் கடந்த 2 வருடங்களாக மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளோம், எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம் என்ற சாதனைகளை எல்லாம் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

அதுமட்டுமல்ல, நான் உங்களிடம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணி வேட்பாளரை ஜெயிக்க வைத்துவிட்டீர்கள் என்றால், ஈரோடு மாவட்டத்திற்கு மாதம் ஒரு முறை வருகிறேன் என கூறியிருந்தேன். அந்த உறுதியின்படி ஈரோடு மாவட்டத்திற்கு வந்து விட்டேன். ஏன் இவ்வளவு காலதாமதம் என நீங்கள் கேட்கலாம். மார்ச் 3ம் தேதி தேர்தல் வெற்றி உறுதியானது. அதன்பின் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 30 நாட்களுக்கு மேலாக நடந்தது. கடந்த முறை வந்தபோது வெறும் அமைச்சராக வந்தேன். இந்த முறை எனது துறையின் சார்பில் எதிர்க்கட்சி கேட்கின்ற கேள்விகளுக்கு எல்லாம் மானியக் கோரிக்கையில் பதில் அளித்து விட்டு தற்போது உங்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏன் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துருக்காங்க?, அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள வித்தியாசம். தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்க. நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தார். அவர் உட்கட்சி பிரச்சனையை தீர்த்து வைக்கச் சென்றாரா? இல்லை. ரூ.260 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கை வசதி கொண்ட தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் கலைஞர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இது எய்ம்ஸ் மருத்துவமனை கிடையாது. இது தி.மு.க. ஆட்சியில் நம்ம கட்டிய, நமது தமிழ்நாடு முதல்வர் கட்டிய மருத்துவமனை. இந்த மருத்துவமனையை ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் திறந்து வைக்க ஜனாதிபதி வரவேண்டும் என்று கூறி அங்கு அவர் நேரில் அழைப்பு விடுத்து வந்தார்.

 

அதேசமயத்தில் எடப்பாடி கோஷ்டியும் டெல்லி சென்றது. அங்கு சென்று மக்கள் பிரச்சனையை பேசினார்களா? இல்லை. நான் அமைச்சர் ஆனதும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க சென்றேன். அவரிடம் 30 நிமிடம் பேசினேன். அவரிடம் நான் எங்க கட்சி பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்றா கூறினேன். மக்கள் பிரச்சனையை பேசி வந்தேன். தமிழ்நாடு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துங்கள், விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என கேட்டு வந்தேன். அதைவிட நீட் தேர்வை தமிழகத்திற்கு ரத்து வேண்டும் என கேட்டு வந்தேன். அதிமுக காரர்கள் கூட கேட்கவில்லை. நான் போய் பிரதமரை நேரில் சந்தித்து கேட்டு வந்தேன். ஆனால், இந்த அ.தி.மு.க. கோஷ்டி டெல்லிக்கு போய் அவர்கள் கட்சியின் பஞ்சாயத்து பேசி வந்துள்ளார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி டெல்லி போகும் முன்னாடி எப்படி பேசினார், டெல்லி போய் வந்ததற்கு பிறகு எப்படி பேசினார். பாஜக தலைவர் ஒருத்தர் இருக்கிறார். அவர் சொன்னார், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். அதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர் அதே தலைவர் குறித்து கேட்டபோது, அந்த ஆள் எல்லாம் ஒரு மனுசன் அவரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என்றார். டெல்லி கூட்டத்தினை முடித்த பிறகு இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு போட்டோ தராங்க. கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதாவது இருக்கா அவர்களுக்கு.

 

அ.தி.மு.க.வில் எத்தனை அணி இருக்கிறது என்றே தெரியாது. ஓபிஎஸ் ஒரு அணி. இபிஎஸ் ஒரு அணி. சசிகலா ஒரு அணி. டிடிவி தினகரன் ஒரு அணி. ஜெ.தீபா ஒரு அணி. இவர் அணிக்குள் இரண்டு அணி இருக்கிறது. ஒன்று அவரது டிரைவர், மற்றொன்று அவரது புருஷன். அந்த அணிக்குள் பெரிய பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. தற்போது ஐபிஎல் மேட்ச் நடந்து வருகிறது. அதேபோல், அ.தி.மு.க.வுக்குள் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம். அந்த அளவுக்கு அணிகள் உள்ளது. எனவே, இதையெல்லாம் நீங்கள் புரிஞ்சுக்கிட்டு... தேர்தலுக்கு தேர்தல் மக்களை சந்திக்கின்ற இயக்கம் கிடையாது திராவிட முன்னேற்ற கழகம். நாங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளோம். அதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

 

ஓபிஎஸ் மாநாடு நடத்தி தி.மு.க.வை பற்றியோ ஆட்சியில் எந்த குறையும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை கிழி கிழினு கிழிச்சுருக்காரு. எடப்பாடி பழனிசாமியை மக்கள் தேர்ந்தெடுத்தீர்களா? எப்படி முதல்வர் ஆனார். சசிகலாவின் காலினை டேபிளுக்கு கீழ் பிடித்து சென்று முதல்வர் ஆனார். அதன்பிறகு அந்த அம்மா காலினையும் வாரிவிட்டீங்க. இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து, மக்கள் பிரச்சனைக்கு யார் வருகிறார்கள், மக்களோடு குறைகளை தீர்க்க யார் முன்னாடி நிற்கிறார்கள், தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் அ.தி.மு.க. காரர்கள் வந்து உங்களை சந்திப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டது. அடுத்த தேர்தலுக்கு தான் அதிமுக காரர்கள் வருவார்கள். ஆனால், தி.மு.க. அப்படியில்லை. எப்போதும் மக்களோடு நின்று போராட்டம் நடத்துவதாகட்டும், நமது மாநில உரிமைகளை மீட்டு எடுப்பதாக ஆகட்டும் நமது தலைவர் எதற்கும் அஞ்சாதவர்.

 

இந்தியாவில் இருக்கக்கூடிய அதாவது வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் அத்தனை பேரும்... தி.மு.க. என்ன முடிவெடுக்கிறது. நமது தலைவர் யாரை பிரதமராக கை காட்டுகிறாரோ? அவர் தான் அடுத்த பிரதமர் என்ற நிலை இருக்கிறது. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டார். அதானி இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி உலக பணக்கார பட்டியலில் 3வது இடத்திற்கு வந்தார். அதானியின் விமானத்தில் ஒன்றாக மோடியும் அதானியும் பயணிக்கின்றனர். மோடி வெளிநாட்டிற்கு சென்றாலும் அதானியை கூட அழைத்து சென்று ஒரு பிசினஸ் வாங்குறார். இதற்கு என்னென்ன முறைகேடு நடந்தது கூறுங்கள் என பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசினார். உடனே ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்துவிட்டார்கள்.

 

மோடியின் நண்பர் ஆளுநராக இருந்த சத்தியபால் மோடியை எதிர்த்தும் பாசிச பாஜக அரசை எதிர்த்தும் குரல் கொடுத்தார். உடனே அவருக்கு சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். என்னிடம் நேற்று செய்தியாளர்கள், ஐ.டி ரெய்டு நடத்துறாங்க, உங்களை அச்சுறுத்துறாங்களா? என கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன், தி.மு.க காரர்களை யாரும் அச்சுறுத்த முடியாது. எங்கள் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையை பார்த்த இயக்கம். இந்த ஐ.டி ரெய்டு எல்லாம் எம்மாத்திரம். நீங்க என்னவெனாலும் ஆக்‌ஷன் எடுங்கள் பார்த்துக்கலாம். இந்த ஐ.டி ரெய்டு எல்லாம் எங்களுக்கு புதுசா. எனவே, 2 ஆண்டுகளில் தலைவர் சொன்ன வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். 100 சதவீதம் விரைவில் நிறைவேற்றுவோம். மக்களை தேடி மருத்துவம், அதைபோல அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம்.

 

இதுவரை 300 கோடி கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். மகளிருக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று வழங்கப்படும் என தலைவர் அறிவித்துள்ளார். கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இந்த தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்களோ, கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசிச பாஜகவின் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்களோ, அதேபோல், பாசிச பாஜகவையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வெகு விரைவில் வந்து கொண்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். உங்களிடம் அன்போடு, பண்போடு, பாசத்தோடு, உரிமையோடு, உங்கள் வீட்டு பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக கேட்கிறேன். தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு உங்களது ஆதரவை தாருங்கள். உங்களுக்காக உழைக்க தலைவர் காத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்