தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “வேல்முருகன் கேட்டது போல் அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சியில் இருக்கக்கூடிய கொக்குப் பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு 34.12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடலூர் மாவட்டத்திற்கு 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 148 பள்ளிகளில் 296 வகுப்பறைகள் சீரமைக்கப்பட இருக்கின்றன. தென்காசியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவியின் பள்ளிக் கட்டடம் சம்பந்தமான கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றினார். 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா மட்டுமல்ல மூன்றாவது முறையாக சட்டமன்றம் வரும் வேல்முருகன் கோரிக்கையையும் ஒன்றாகப் பார்க்கும் முதல்வரும் அரசும் அமைந்துள்ளது.
7.5% இட ஒதுக்கீடு மருத்துவத்திற்கு மட்டுமல்ல அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அனைத்திற்கும் சேர்த்து ஆர்.டி துறையில் இருந்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 30% ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கும் கோரிக்கை தான். ஏறத்தாழ 172 தொகுதிகளில் இதுபோன்ற பள்ளிக் கட்டடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 27ல் நடைபெற உள்ளது. இனி படிப்படியாக இப்பணிகள் நடைபெறும்” எனக் கூறினார்.