Skip to main content

“பில்டிங் தான் ஸ்ட்ராங்கு... பேஸ்மட்டம் வீக்கு” - மோடியை சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் 

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Minister anbil mahesh comment on modi
கோப்புப் படம் 

திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் அமைச்சர்கள், மேயர்கள், எம்.எல்.ஏக்கள் அல்ல உங்களுக்கான வேலை செய்யும் சேவகர்கள். இந்தியாவின் விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்த மண் இந்த வேலூர் மண்.

அன்றைக்கு ஆங்கிலேயர்கள் படையெடுத்தார்கள். இன்று ஆரியர்கள் படையெடுக்கிறார்கள். இது இரண்டாவது போர். நாங்கள் முறைகளை கண்டிக்கிறோமே தவிர நபர்களை அல்ல என்று சொன்னவர் பெரியார். மகளிருக்கான இலவச பேருந்து மூலம் 800 ரூபாயை சேமித்துக் கொடுத்திருக்கிறோம். இது ஆய்வு கூறுகிறது. ஆனால் கேஸ் விலை உயர்வு மூலம் 800 ரூபாயை உங்களிடம் எடுத்தது மத்திய மோடி அரசு.

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்துணை அமைத்தவர், மாநகராட்சியை பெற்றுத் தந்தவர் கலைஞர். இப்போது அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் மோடி. மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தை பார்க்காதீர்கள். மதத்தின் பெயரால் நீங்கள் வேறுபடுத்தி பார்க்கிறீர்கள். ஆனால் நாங்கள் மொழியால் ஒன்றுபடுத்தி பார்க்கிறோம். வெள்ளம் பாதித்தபோதும், புயல் தாக்கி சேதம் அடைந்த போதும் வராத மோடி, நீட்டுக்காக 22 பேர் உயிரிழந்தும், போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகள் உயிரிழந்த போதும் வராத மோடி, ஏன் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்திற்கு கூட வராத மோடி அடிக்கடி தமிழகம் வருவதன் காரணம் தேர்தல்.

கடவுளை வைத்து அரசியல் செய்தவர்கள் இன்றைக்கு கடலுக்கு அடியில் சென்று அரசியல் செய்கிறார்கள். வறுமையை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த மோடி அவர்கள் வறுமையை ஒழித்தார்களா? ஆனால் இன்றைக்கு திமுகவை ஒழிப்போம் திமுகவை ஒழிப்போம் என பேசுகிறார்கள். மு.க. ஸ்டாலின் பிரதமராக வந்துவிடுவார் என்ற பயம்தான் மோடியை இப்படி பேச வைக்கிறது. மோடியின் பார்வை தமிழகத்தின் மீது எந்த மாதிரி உள்ளது என்றால் ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு 26 பைசா தான் கொடுக்கிறார்கள்.

GST, வனப் பாதுகாப்பு சட்டம், நீட், சாலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றால் நமக்கான உரிமைகளை தடுக்கிறார்கள். நமது உரிமையை எல்லாம் விட்டுக் கொடுத்தவர்கள் கடந்த அதிமுக ஆட்சியினர். மோடி அரசு மிரட்டினால் நாங்கள் பயந்து போக அதிமுக அல்ல, அண்ணாவின் திமுக. நாம் ஏன் 40/40னு சொல்லணும், இனி 400ம் நமதே என சொல்வோம். 

2021 முதல் 2023 தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வரை பாஜக தோல்வியடைந்துள்ளது. அதேபோல வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியடையும். மோடி கம்பீரமாக வலம் வரவில்லை, பில்டிங் தான் ஸ்ட்ராங்கு பேஸ்பட்டம் வீக்கு. திமுகவை ஒழிப்போம் என பேசுகிறார்கள். திமுகவை ஒழிக்க நினைத்தவர்கள் நிலை இன்றைக்கு என்ன என்று தெரியும். ஒழிப்போம் என பேசுகிறார்கள். நீங்களா? நாங்களா? என பார்க்கலாம். 

பாஜகவின் ஆட்சியை பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். வாக்கு சீட்டு மூலமாக ஒரு ஜனநாயக புரட்சியை மக்கள் ஏற்படுத்த தயாராக இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் இந்த வேலூர் மண். வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

சார்ந்த செய்திகள்