பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் நாதக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா எனச் சிலர் கேட்கிறார்கள். இது மிகப் பழைய கேள்வி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். அதற்கெல்லாம் நாங்கள் சலிக்கும் ஆட்கள் இல்லை. நாங்களா அல்லது மக்களா என்பது தான் பிரச்சனை. நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ச்சியாகத் தோற்கிறார்கள். ஒருநாள் அவர்களுக்குத் தெளிவு வந்து இவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்கள் என்றால் எங்களுக்கு வாக்களிப்பார்கள். வெல்லப்போகிறோம்.
பாஜகவை வரவிடாமல் தடுப்பதற்கு மாற்று அணியை உருவாக்க வேண்டும். அதை மாநிலக் கட்சிகள் சேர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இப்பொழுது அந்த முயற்சியை எடுத்தால் தான் வீழ்த்த முடியும். அப்படி ஒரு அணி உருவாகி வரும் போது அதில் சேர்வதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். பாஜகவிற்குக் குறைவான இடங்கள் கிடைத்தால் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஆதரவு அளித்துவிட்டு வந்துவிடுவார்கள். அந்த அவப்பெயரை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும். நாங்கள் உறுதியாக நின்று தனித்துத்தான் போட்டியிடுவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் அப்பொழுது யோசிப்போம்” எனக் கூறினார்.