ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று முன்தினம் (06.06.2024) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்காக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவியும், மேளதாளத்துடன் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08-06-2024) மாலை 06.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.