இராமநாதபுரத்தில் உள்ள ஸ்டேசனரி மொத்த விற்பனையாளர் கடைக்கு வந்த இரண்டு காவலர்கள், ''சார் வாங்கிட்டு வர சென்னார்'' என்றவுடன் கடையிலிருந்தவர் ''மாதம் மாதம் இப்படி கேட்டால் நான் என்ன செய்ய, உங்களுக்கு குடுத்துபுட்டு நான் மாச மாசம் ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கு, நீங்க ஒரு ஸ்டேசன்னா பரவாயில்ல, எல்லா ஸ்டேசன்ல இருந்தும் கேட்டா என்ன பண்றது'' என்றார்.
வந்த காவலர்களோ ''சார் ஜிஎஸ்டி எவ்வளவுனு கேட்டு கொடுக்க சொன்னாரு. அவரு உங்ககிட்ட கேக்குறதுக்கு ரொம்ப சங்கடப்படுகிறார்'' என்று சொல்லிவிட்டு பில்லை மட்டும் வாங்கிட்டு சென்றனர்.
நாம் அவரிடம் விசாரித்தபோது ஸ்டேசனிலிருந்து ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வாங்கமல் ரூபாய் 5000 முதல் ரூபாய் 6000 வரை வெறும் பில்லை மட்டும் வாங்கி செல்கிறார்கள் என்றார்.
நாம் இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, பலரும் சொல்ல தயங்கிய நிலையில் ஒரு காவலர் நம்மிடம், ''ஆமாம் ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் நோட்டுகள், பேனா, பென்சில், ஸ்டேசனில் இல்லாத பாத்ரூமிற்க்கு ஆசிட், பினாயில், துடைப்பம் ஆகியவை உட்பட சில பொருட்கள் சேர்த்து 6000 ரூபாய்க்கு பில்லை மட்டும் வாங்கி நாங்கள் ஏடிஎஸ்பி அலுவலகம் மூலமாக எஸ்பி அலுவலகத்திற்க்கு அனுப்புகிறோம்.
மேலும் நாங்கள் பில் மட்டும் கேட்பதற்க்கு மிகவும் சங்கடமாக உள்ளது. நேரடியாக எஸ்.ஐ. யாரும் கையெழுத்துயிடுவதில்லை. சிறப்பு பயிற்சி எஸ்.ஐகள் மற்றும் பதவி உயர்வுபெற்ற எஸ்ஐகள் மட்டும் தான் கையெழுத்துயிடுகின்றனர்'' என கூறினார். மேலும், ''இராமநாதபுரத்தில் மொத்த 45 காவல்நிலையங்கள் உள்ளன. ஒரு காவல்நிலையத்திற்க்கு 6000 என்றாலும் 45 காவல்நிலையத்திற்க்கு 270000 ரூபாய் என்ன ஆகிறது என்று தெரியவில்லை'' என்றார் அந்த அதிகாரி.