திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி, தேர்தலுக்குப் பின் கோவில் கோவிலாகச் சென்று யாகங்கள் நடத்துவதாகவும், ஒருவித பதற்றத்தில் இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தேன்மொழியும், திமுக கூட்டணி கட்சியின் முருகவேல் ராஜனும் போட்டி போட்டுள்ளனர். இதில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி, ஆரம்பத்தில் எளிதாக வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், நிலக்கோட்டை தேர்தல் களம் இறுதியில் கடினமாகி வாழ்வா சாவா என மாறிப் போனதால் கடும் மன உளைச்சலில் இருந்தாராம் தேன்மொழி. தேர்தல் களத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜனின் பிரச்சாரம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் சொந்தக் கட்சியினரின் உள்குத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடியுள்ளார்.
கடைசி கட்டத்தில் திமுக பணப் பட்டுவாடா செய்யவில்லை என தெரிந்ததும் மன நிம்மதி அடைந்த தேன்மொழி, தன் கணவர் சேகர் மூலம் முழுவீச்சில் தொகுதி முழுவதும் ரூ. 500 என பட்டுவாடாவுக்கு தயார் செய்து அனுப்பினார். பணம் போன வத்தலக்குண்டு ஒன்றியத்தில், முக்கிய நிர்வாகிகள் ரூ.10 லட்சத்தை சுவாகா செய்துவிட்டு, காணவில்லை என சத்தியம் செய்ய மீண்டும் கொடுத்திருக்கிறார் தேன்மொழி.
இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதனிடம் புகார் கொடுத்துவிட்டு, பட்டுவாடா பணிகளில் கவனம் செலுத்திய தேன்மொழிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பைக் ஷோரூம்களில் அதிமுகவினர் புதிதாக பைக்குகளை புக் செய்திருப்பதாகவும், எலக்ட்ரானிக் கடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. டிவி விற்பனையாகி இருப்பதாகவும் தகவல் கிடைக்கவே அதிர்ந்துபோனார். கொடுத்த பணம் 70 சதவீதத்தை 45 சதவீதம் மட்டுமே தொகுதியில் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது கண்டு மனம் நொந்துபோனார்.
‘அக்கா தேன்மொழி பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க’ என திமுக வேட்பாளரின் பிரச்சாரமும் மக்களிடம் நன்றாக எடுபட்டிருந்தது. இதனால், ஏப்ரல் 6ஆம் தேதி விழுந்த வாக்குகள் பெரும்பாலானவை இரட்டை இலைக்கு விழுந்ததா? அல்லது திமுக வேட்பாளரின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டு மாற்றி ஏதும் போட்டுவிட்டார்களா? என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த தேன்மொழி, தற்போது கோவில் கோவிலாகச் சென்று யாகம் வளர்த்து வருகிறார். அதோடு உளவுத்துறை ரிப்போட்டிலும்கூட நிலக்கோட்டை தொகுதி இழுபறி தொகுதி என கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவில்களில் யாகம் நடத்திவருகிறார் என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.