எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தலைமையில் கடந்த 21.09.2020 தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் தொடர்பான, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் - ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன.
அதன்படி இன்று கந்தன்காவடி அருகே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘விவசாயிகள் விரோத சட்டத்தைத் திரும்பப் பெறு’ எனும் முகக்கவசங்களை அணிந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர்.