விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு பல பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தபோது “இந்த முறை ரமேஷ் குமாரும், ராஜ் குமாரும் உங்களுடைய வார்டு உறுப்பினர்களாக இருக்கவேண்டும் என்று வாக்களித்தீர்களோ, எப்படி அண்ணன் ஏ.ஆர்.ஆர் சீனிவாசன் எம்.எல்.ஏ. சென்னையிலே உங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று வாக்களித்தீர்களோ, அதேபோல, உங்களுக்காக டெல்லியில் பணியாற்றுவதற்காக, எனக்கு வாய்ப்புத் தாருங்கள். கை சின்னத்திலே வாக்களித்து வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டு வந்திருக்கிறேன்.
என்னுடைய பணி என்பது டெல்லியிலே, உங்கள் குரலாக ஒலித்து, மத்திய சர்க்காருடைய நிதிகளை, நல்ல திட்டங்களை அளிக்கக்கூடிய ஒரு அரசு அமைவதற்குத் துணையாக இருப்பது. கடந்த 10 ஆண்டுகளிலே மோடி அரசாங்கம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை மிக பகிரங்கமாகக் கூட்டியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது 450 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலை, இப்ப எவ்வளவு? 900 ரூபாய்.. 10 வருஷத்துல 450 ரூபாய் கூட்டிருக்காங்க. எழுபது வருஷத்துல கூட்டமுடியாத விலையை, 10 வருஷத்துல கூட்டிருக்காரு மோடி.
பெட்ரோல் விலை 72 ரூபாயாக இருந்தது. இப்போ எவ்வளவு விலை? 102 ரூபாய்.. டீசல் விலை 65 ரூபாயா இருந்துச்சு. இப்ப விலை 90 ரூபாய். மோடி அரசாங்கத்துல, கடந்த 10 வருஷத்துல டீசல் பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை அதிகமா கூடிருக்கு. மோடி அரசாங்கம் தொடரணுமாங்கிறதுதான் கேள்வி. மோடிக்கு வாக்களித்தாலோ, முரசுக்கு வாக்களித்தாலோ, தாமரைக்கு வாக்களித்தாலோ, பெட்ரோல் டீசல் விலை கூடும். கேஸ் சிலிண்டர் விலை 2000 ரூபாய் ஆகிவிடும். இதெல்லாம் ஆகணும்னா, யாரு வேணும்னாலும் முரசுக்கும் தாமரைக்கும் ஓட்டு போடலாம். போடலாமா? போடக் கூடாதா? இதை எல்லாம் தயவுசெய்து நீங்கதான் முடிவு பண்ணனும். தாய்மார்கள்கிட்ட கேட்டுக்கிறேன். நீங்களே உங்க சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிடாதீங்க. அவர்களுக்கு வாக்களித்து விலையைக் கூட்ட வச்சிறாதீங்க.
உங்ககிட்ட கூட்டி வாங்குற காச என்ன பண்றாங்க? அதானிக்கு கொடுக்குறாரு மோடி. அதானின்னு அவருக்கு ஒரு நண்பர் இருக்காரு. குஜராத்காரர். அவரு உலகத்துல 2வது பணக்காரர் ஆகிருக்காரு. அவருக்கு இதுவரைக்கும் 17 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி பண்ணிருக்காங்க. நமக்கு ஒரு லட்ச ரூபாய் கடனைத் தள்ளுபடி பண்ணமாட்டேங்கிறாங்க. அங்க பார்த்தா 17 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி பண்ணிருக்காரு. ராகுல் காந்தியும், அண்ணன் தளபதியும், பெண்களுடைய, சாதாரண மக்களுடைய குறைகளை அறிந்து, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கம் நடத்துறாங்க. தளபதியார் சொல்லியிருந்தார், அப்ப 1000 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்குக் கொடுப்போம்ன்னு.
முதியவர்களுக்கு 1200 ரூபாய் பென்ஷனைக் கூட்டுவோம்னு. குடும்பத்தலைவிகளுக்கு மாசம் 1000 ரூபாய் கொடுத்தாங்களா? இல்லையா? கொடுத்தாங்க. இதுதான் கலைஞர் மகனுடைய ஆட்சி. தளபதியின் ஆட்சி என்பது, பெண்களுடைய, உங்களுடைய சகோதரனாக, தகப்பனாக, ஒரு நண்பனாக, குடும்பத்தில் ஒருவராக, உங்களுடைய செலவுக்காக 1000 ரூபாயை பங்களிப்பா தருது அரசாங்கம். அதானிக்கு கொடுக்கல. அதானிக்கு கொடுக்காம, உங்க கையில பணம் கொடுக்குறாங்க. இதுதான் தளபதியினுடைய ஆட்சி. இதுபோலவே, ராகுல் காந்தியினுடைய ஆட்சி என்றால், டெல்லியிலே மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய். ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் கொடுக்கப்படும் என்பதை உத்தரவாதமாக, ராகுல் காந்தி அளித்திருக்கிருக்கிறார்.
இந்தியாவில் இருக்கிற ஏழைப் பெண்களுடைய எண்ணிக்கை மொத்தம் 10 கோடி. அந்தப் பத்து கோடி குடும்பங்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பது ராகுல் காந்தியின் திட்டம். படிக்காத இளைஞர்கள் நம்ம வீட்டுல நிறைய பேர் இருக்காங்க. பி.இ. படிச்சிட்டு, டிப்ளமோ படிச்சிட்டு, பி.ஏ படிச்சிட்டு, பி.எஸ்சி படிச்சிட்டு வேலை கிடைக்காம இருக்காங்க. அவர்களுக்கு ராகுல் காந்தியினுடைய உத்தரவாதம், அரசாங்க வேலைகளில் 30 லட்சம் பேரை, ஒரு வருடத்திற்குள் நிரப்புவோம் என்பது. அதுமாதிரியே, படித்தவுடன் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு, அப்ரன்டீஸா ஒரு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்போம் என்ற திட்டத்தையும் சொல்லிருக்காரு.
ஆக மொத்தத்துல, ஒரு பக்கம் ராகுல் காந்தி, இன்னொரு பக்கம் தளபதி ஸ்டாலின், இவங்க வேலை என்ன? உங்க கையில பணத்தைக் கொடுக்குறது. மோடியுடைய வேலை என்னன்னா.. உங்கட்ட இருந்து பணத்தைப் பிடுங்குறது. எது வேணுங்கிறத நீங்கதான் முடிவு பண்ணனும். நல்ல முடிவு எடுப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த பூமி இது. நீங்க எல்லாரும் நல்ல முடிவு எடுப்பீங்கன்னு நம்புறேன்.” எனப் பேசினார்.