தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
அந்த தீர்மானத்தில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 700 பேர் தேர்வானது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி முகாமில் இருக்கும் 700க்கும் மேற்பட்டோர் நில அளவர் ட்ராஃப்ட்மேன் பணியிடங்களுக்கு தேர்வு பெற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வின் முக்கிய அதிகாரிகளும் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறார்கள்.