சென்னை ஆவடி அருகே நரிக்குறவ இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாணவிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அப்பகுதிக்குச் சென்று மாணவர்கள் மற்றும் மக்களுடன் உரையாடினார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பிறகு நரிக்குறவர் மாணவி ஒருவர் வீட்டில் உணவு சாப்பிட்ட தமிழக முதல்வர், அதன்பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, ''பெருமாள் கோயில் நிகழ்வு ஒன்றில் நரிக்குறவர் இனப் பெண் சாப்பிட சென்ற போது அவருக்கு அனுமதி மறுத்துள்ளார்கள். உள்ளே விட மறுத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பெண் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அச்சப்படாமல் அதை அப்படியே செய்தியாக்கி, வீடியோவில் பேசியிருந்தார். அதைப் பார்த்த நான் ஆச்சரியப்பட்டேன், அதிசயப்பட்டேன், வருத்தப்பட்டேன். உணவளிக்கக்கூடிய நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அனுமதிக்காமல் இப்படி ஒரு கெட்ட காரியத்தை செய்து இருக்கிறார்களே என்று நான் கோபப்பட்டேன், ஆத்திரப்பட்டேன். உடனே இன்று அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகர்பாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த செய்தியை சொன்னேன். நீங்கள் பார்த்தீர்களா... இந்த செய்தியை நான் டிவியில் பார்த்தேன், வாட்ஸப்பில் பார்த்தேன் அங்கு சாப்பாடு போடுகின்ற இடத்தில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை அனுமதிக்காமல் இப்படி ஒரு கொடுமை செய்து இருக்கிறார்களே... நியாயமா...? உடனடியாக நீங்கள் அங்கே போய் விசாரியுங்கள். அந்தப் பெண்ணை அதே கோவிலில் உட்காரவைத்து எல்லாருக்கும் மத்தியில் உட்கார்ந்து சாப்பிட வைக்கவேண்டும். அமைச்சராக இருக்கக்கூடிய நீங்களும் அவருடைய பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடனும் என்று உத்தரவிட்டதற்குப் பிறகு அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து கோவிலில் நடைபெறக்கூடிய அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து பக்கத்திலேயே அமர்ந்து உணவருந்தினார்.
அந்த காட்சிகள் எனக்கு நிம்மதியும் சந்தோசத்தை கொடுத்தது. இது எனக்கு பெருமை என்பதை விட அந்த பெண் தைரியமாக வாதாடினார் பாருங்கள் அதுதான் முக்கியம். அந்த பெண்ணுடைய பெயர் அஸ்வினி. உள்ளபடியே அந்த பெண்ணுக்கு நான் இங்கிருந்து என்னுடைய வாழ்த்துக்களை எப்பொழுதும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருடைய பூஞ்சேரி கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்டேன். அதையெல்லாம் இந்த அரசு உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் படிப்படியாக நிச்சயமாக உறுதியாக செய்து கொடுப்போம் என்றேன். தமிழ்நாடு முழுக்க இப்படி பல பகுதிகள் இருக்கிறது. இது என்னோட அரசு அல்ல இது நம்ம அரசு. இது விளிம்புநிலை மக்களுக்கான அரசு. இன்னொரு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா. அவர் வீடியோவில் பேசியதை நான் பார்த்தேன். பார்த்த உடனே அமைச்சர் ஆவடி நாசருக்கு தொடர்பு கொண்டேன். அந்த வீடியோவை அனுப்பி வைத்தேன். அவர் சொன்னார் நானும் பார்த்தேன் அதற்குரிய நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
அதன்பிறகு நேராகச் சென்று அங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று விசாரித்து அங்கிருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் உடனடியாக வந்து அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வீடியோ காலில் நானே மாணவி திவ்யாவுடன் பேசினேன். அமைச்சர் மட்டுமல்ல இன்னும் ஒரு வார காலத்தில் எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது நேரில் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தேன். 'வந்தா சாப்பாடு போடுவியா' என்று கேட்டேன் 'நிச்சயமாக வாங்க கறிசோறு போடுவோம்' என்று சொன்னாங்க. அந்த அடிப்படையில்தான் இன்று உங்களை எல்லாம் சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. விளிம்புநிலை சமுதாயத்திலுள்ள பெண் பிள்ளைகள் இன்று துணிச்சலாக பேசுவதை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைக் குரல். அதனால்தான் விளிம்பு நிலையில் உள்ள திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகிய 3 பேரும் கோட்டையில் இருக்கக்கூடிய என்னுடைய அறைக்கு அழைத்தேன். முதலமைச்சர் ரூமுக்கு வந்தார்கள். இது திராவிட இயக்கத்தின் பெண் உரிமைக்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். இந்த வெற்றியை நான் திவ்யா மூலமாக பார்க்கிறேன். அஸ்வினி வடிவில் பார்க்கிறேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டிற்கு போனேனோ அதேபோல் திவ்யா வீட்டிற்கு வந்திருக்கிறேன்'' என்றார்.