மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி பா.ஜ.க.வின் முதுகில் குத்திவிட்டதாக உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவைத் தொகுதியில் வரும் மே 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன. இந்நிலையில், இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கலந்துகொண்ட உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விரார் என்ற பகுதியில் மக்களிடையே பேசினார்.
அப்போது அவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இந்துத்வா என்ற பாதையிலிருந்து விலகி திசைமாறி பயணித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியால் மட்டுமே வளர்ச்சி என்ற இலக்கு சாத்தியமாகும். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணியமைத்துக் கொண்டு அதன் கட்சி விவகாரங்களில் சிவசேனா மூக்கை நுழைத்து முதுகில் குத்திக் கொண்டிருக்கிறது. இதைக்காணும் பால் தாக்கரேவின் ஆன்மா நிச்சயம் வருத்தப்படும். அதேசமயம், நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும். மக்கள் சிவசேனா கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா கட்சி, கடந்த பல மாதங்களாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.